Saturday, May 26, 2012

மும்பை தோற்றதற்கு நானே பொறுப்பு - ஹர்பஜன் சிங்கின் வாக்குமூலத்தால் பரபரப்பு!

கி.அ.அ.அனானி அனுப்பிய கார்ட்டூன்:


பிற்சேர்க்கை:

மேற்கண்ட கேலிச்சித்திரத்தை இட்லி வடைக்கு அனுப்பினோம். அதை அவர் பிரசுரித்து விட்டு பின்னர் "சிலரின் வேண்டுகோளுக்கு இணங்க இந்த படம் நீக்கப்படுகிறது. யாருடைய மனமும் புண்படுத்தும் எண்ணம் இட்லிவடைக்கு என்றும் இருந்ததில்லை. நன்றி...." என்ற வாசகங்களுடன் நீக்கிவிட்டார்.

இடுகை இருக்கிறது, சித்திரம் இல்லாமல் :)

இதிலிருந்து இந்த கேலி சித்திரத்தை போடுவதில் இட்லி வடைக்கு மறுப்பில்லை. "மனது புண்பட்ட" சிலரது வேண்டுகோளின் படி நீக்கியிருக்கிறார் என்று அர்த்தம் செய்து கொள்கிறேன்.

அம்பானி குடும்பத்துக்கு தமிழ் தெரியும் என்றோ அல்லது அவர்கள் நிரந்தர "இட்லி வடை " வாசகர்கள் என்றோ எந்தத் தகவலும் நான் இதுவரை கேள்விப் படாததால் இந்த மனம் புண்படுதல் நேரடியாக " அம்பானி குடும்பத்துக்கு " இல்லை. "அம்பானி ரசிகர்களுக்கு " மனிதாபிமானத்தின் அடிப்படையில் மட்டுமே என்றும் புரிந்து கொள்கிறேன்.

எந்த உடல் ஊனத்தையும் கேலி செய்வது தவறு.ஆனால் நான் பார்த்த வரையில் குண்டு , ஒல்லி.தொப்பை போன்ற மாறும் தன்மையுடைய அம்சங்களைக் கேலி செய்வது சாதாரணமாக நடக்கும் விஷயங்கள்தான். இது தவறென்று சொல்பவர்கள் " ஒல்லி குச்சி " நரசிம்மனையும். "தயிர் வடை" தேசிகனயும், "குண்டு" கல்யாணத்தையும் தமிழ் சினிமா உலகம் அவர்களது உடல் வாகை வைத்து கேலி செய்து படம் பண்ணும் போது அதைப் பார்த்து கெக்கெக்கே என்று சிரிக்கிறோமா இல்லை அல்லது "ச்சே..ச்சே இதெல்லாம் தப்பு " என்று பக்கத்து சீட்டில் இருப்பவரிடமாவது சொல்கிறோமா என்று "புண் பட்ட " மனதைத் தொட்டு யோசிக்கலாம். நானும் குண்டு மல்லிகா, குட்டை கோமளா..டேய் இப்ப டல் திவ்யா தூள் திவ்யா ஆகிட்டாடோய்" மாதிரியானவைகளை தினமும் பார்ப்பதால் குண்டுத்தன்மையை கேலி செய்வது எனக்குத் தப்பாகப் படவில்லை.

இதைச் சொல்வது நான் அம்பானிக்களை கிண்டல் செய்தது சரி என்று சப்பைக் கட்டு கட்டுவதற்காக கண்டிப்பாக இல்லை.

இந்தியா போன்ற நாட்டில் பணம் படைத்தவர்கள் என்ற ஒரே காரணத்துக்காக 5 பேர் இருப்பதற்காக,1000 கோடி ரூபாயில் "அன்டில்லா " என்கிற அரண்மனையை விடப் பெரிய மாளிகையைக் கட்டி அதற்கு 70 லட்சம் ரூபாய் மின் கட்டணம் கட்டிக் கொண்டு பின் வாஸ்து சரியில்லை என்று சொல்லி கட்டிய வீட்டில் குடியிருந்தும் குடியிருக்காமல் இந்திய ஏழ்மையை எள்ளி நகையாடும் விதமாக வாழ்க்கை நடத்தும், அந்த பணத் திமிரை வெளிக்காட்டுவதில் சிறிதும் தயக்கம் காட்டாத அம்பானிக்களையும் ஊதாரித்தனத்திலும் தாந்தோன்றித்தனத்திலும் அவர்களை விட எதிலும் சற்றும் சளைக்காத மல்லையாக்களையும் மற்றும் அது போன்ற பணத்திமிர் பிடித்தலைபவர்களையும் "எல்லா விதத்திலும் " கிண்டலும் கேலியும் செய்வதில் எனக்கு எந்த தயக்கமோ ,வருத்தமோ கிடையாது என்பதையும் பதிவு செய்து கொள்கிறேன்.

இதே கருத்துள்ள ஒரு பின்னூட்டத்தை இட்லி வடையிலும் பதிந்துள்ளேன்.

கி அ அ அனானி.

Friday, May 25, 2012

IPL5 -CSK vs MI -மும்பை F-16ஐ சுட்டு வீழ்த்திய தோனி”காப்டர்”

IPL5 -CSK vs MI -மும்பை F-16ஐ சுட்டு வீழ்த்திய தோனி”காப்டர்” 

சென்னை அணி, நேற்று பங்களூரில் நடந்த எலிமினேட்டர் ஆட்டத்தில் மும்பை அணியை ஜெயித்தது என்று சொல்லுவதை விட நசுக்கியது (அ) தரையிலிட்டு தேய்த்தது என்று சொல்வது பொருத்தமானதாக இருக்கும்! இதற்கு ஒரு காரணம், சென்னையின் Big match அனுபவமும் (3 ஐபிஎல்இறுதி ஆட்டங்கள், 1 செமிஃபைனல்) கூட! சென்னை அணி 4வது இடத்துக்கு ஓசியில் வந்தது என்று சொல்லுபவர்களுக்கு: பங்களூரும், ராஜஸ்தானும் தங்கள் தலையில் தாங்களே மண்ணை அள்ளிப் போட்டுக் கொண்டதற்கு, சென்னை என்ன பண்ணும்? அது போல, தர்மசாலாவில் நடந்த தில்லி-பஞ்சாப் ஆட்டத்தில், தில்லியின் வேகப்பந்து வீச்சுக்கு எதிராக பஞ்சாபின் வெற்றிக்கு வாய்ப்பு ரொம்ப கம்மி என்பது உலகறிந்த விஷயம் தானே! மேலும், சென்னை ஒரு 17 பாயிண்டுகள் எடுத்து, அதோடு முக்கியமாக +VE NRR-ஐ வைத்திருந்ததால் தானே, பிளே ஆஃப்-இல் நுழைய முடிந்தது!

நேற்றைய ஆட்டத்தில், தோனியின் ஆட்டம் அட்டகாசம்! அவரது பரபரப்பின்மையே முக்கியமான சமயங்களில் அவரது பலம் என்பதை அவர் மீண்டும் நிருபீத்தார்! அதுவும் அந்த ஹெலிகாப்டர் ஷாட்டை, (அதுவும் மலிங்காவின் பந்து வீச்சில்) shot of the day, ஏன், shot of IPL-5 என்று தாராளமாகக் கூறலாம்! அந்த ஓவரில், மலிங்கா 2 பந்துகளை chuck பண்ணினார் என்பது கூடுதல் தகவல்! அவர் 4 ஓவர்களில் 41 ரன்களை தாரை வார்த்தது மிக்க மகிழ்ச்சியாக இருந்தது! தனது இன்னிங்க்ஸில், சங்கர் படத்துக்கு இணையான பிரும்மாண்டம் கொண்ட 112 மீ சிக்ஸர் ஒன்றும் தோனி அடித்தார்.

தோனியின் 20 பந்துகள் 51 ரன்களும், பிரேவோவின் 14 பந்துகள் 33 ரன்களுமே, சென்னையின் மெகா ஸ்கோருக்கு (187) வழிவகுத்தன! அது போல, 1 ரன்னில் 2 விக்கெட்டுகளை இழந்து மதிமயங்கி இருந்த சென்னையின் துயரகற்றி உய்ய வைத்த பெருமைக்குரியவர்கள், பத்ரியும், ஹஸ்ஸியும் ஆவர் :-) சென்னை முதல் 9 ஓவர்களில் எடுத்தது 47 ரன்கள் மட்டுமே! அடுத்த 4 ஓவர்களில் எடுத்ததும், 47 ரன்கள்!! தலைவர் தோனி, அண்ணல் பிரேவோ காஸ்மிக் நடனத்தின் முடிவில், அதாவது கடைசி 7 ஓவர்களில் சென்னை எடுத்தது, 93 ரன்கள்!

அதே நேரம், நல்ல திறமையிருந்தும், தொடர்ந்து சொதப்பும், முரளி விஜயையும், ரைனாவையும் பார்த்து மகா எரிச்சலாக இருந்தது! பிரேவோ, பந்து வீச்சிலும் நேற்று மிளிர்ந்தார். 3-0-10-2. அதுவும், போலார்ட் அவுட்டானவுடன், பிளேன் பிடித்து உடனே ஊருக்குச் செல்லுமாறு பிரேவோ அறிவுரை வழங்கி, அவருக்கு “பை பை” சொன்னது கண் கொள்ளா காட்சி ;-) ஹில்ஃபன்ஹாஸ் பந்து வீச்சு ரொம்ப disappointing! இந்திய ஆடுகளங்களில் அவர் ஷார்ட்டாக பந்து வீசுவதை குறைத்துக் கொள்ள வேண்டும்! Some of his deliveries were standing up, begging to be hit !!! ஹில்ஃபன்ஹாஸ் அடுத்த ஆட்டத்தில், தனது அனுபவத்தையும்,  திறமையையும் முழுவதுமாக நீரூபிப்பார் என்று நம்புகிறேன்!

டுபிளஸ்ஸிக்கு பதில் ஹஸ்ஸியை அணியில் தக்க வைத்துக் கொண்டது நல்ல விஷயமே! சென்னை1-2 என்ற நிலையில் இருந்தபோது, அவரது அனுபவம் மிக்க பயனுள்ளதாக அமைந்தது! இதை hind sight-ல் தான் கூறுகிறேன் என்றாலும், அது தான் உண்மை!!!! இதற்கு தோனியை பாராட்ட வேண்டும்! அஷ்வின் எதிர்பார்த்தது போல சிறப்பாக பந்து வீசினார். ஆனால், அவரை விட பவர் பிளே ஓவர்களில் தைரியமாக, மிகத் திறமையாக பந்து வீசிய ஜகதியை எத்தனை பாராட்டினாலும் தகும்! அதுவும், ஹில்ஃபன்ஹாஸ் பந்து வீச்சு ஸ்மித்தால் துவம்சம் செய்யப்பட்டுக் கொண்டிருந்த ஒரு கடினமான சூழலில்!

என்னைப் பொருத்தவரை, அவரது ஆல்ரவுண்ட் பெர்ஃபார்மன்ஸுக்காக, பிரேவோவுக்குத் தான் (தோனிக்கு தரப்பட்ட) ஆட்ட நாயகன் விருது வழங்கப்பட்டிருக்க வேண்டும்! எனது முந்தைய (இட்லிவடை வலைப்பதிவில் இட்ட) ஐபிஎல் இடுகையில், சென்னை ஆடுகளத்தை சுழற்பந்து வீச்சுக்கு அதிகம் உதவாத வகையில் சற்றே சீர் செய்ய வேண்டும் என்று கூறியதை சற்று மாற்றிச் சொல்கிறேன்! நாளைக்கு சுழற்பந்து வீச்சுக்கு ஏதுவாகவும், ஞாயிறன்று, சற்றே பசுமையான ஆடுகளமாகவும் அமைத்தல் அவசியம் :-)

என்னடா, மும்பை பேட்டிங் பற்றி எதுவுமே எழுதவில்லை என்று நினைப்பவர்களுக்கு: அந்த உதவாக்கரைகள் பேட்டிங் குறித்து எழுத ஒரு எழவும் இல்லை! அச்சுபிச்சு போல இருக்கும் அம்பானியின் திருமகன் ஒரு பெரிய சோபாவில் தனியாக அமர்ந்திருந்ததை டிவியில் காட்டினார்கள்! மும்பை எப்போதும் போல முக்கியமான ஆட்டங்களில் CHOKE-இ விடும் என்று தெரிந்தோ என்னவோ, நிடா அம்பானி பங்களுர் பக்கம் தலைகாட்டவில்லையோ? எல்லாவற்றையும் விட, ஆட்டம் முடிந்த பிறகு, பேட்டி என்ற பெயரில் டேனி மாரிஸன் பிரசித்தி பெற்ற ஐபிஎல் குட்டிகள் ஷிபாங்கி மற்றும் அர்ச்சனா விஜயாவுடன் அடித்த லூட்டி தான் நேற்றைய ஹைலைட் ;-)

இப்படியாக, சென்னை சூப்பர் கிங்க்ஸ் (CSK) Mumbai Choker Indians (MCI) அணியை (எதிர்பார்த்தது போல) முக்கியமான எலிமினேட்டர் ஆட்டத்தில் வென்றது! MCI அணி சென்னையை 2 குரூப் ஆட்டங்களிலும் ஜெயித்தது என்பது அனைவரும் அறிந்த ஒன்றே! ஆனால், என்ன பிரயோஜனம்? இப்போதிலிருந்து, சென்னைக்கு 1 match at a time & 2 to go, இரண்டும் நம்மூர் சேப்பாக்கத்தில்! நம்பிக்கையே வாழ்க்கையின் உயிர்நாடி :-)

எ.அ.பாலா

Saturday, May 12, 2012

IPL5 CSK vs RR சென்னைக்கு ஒரு ராயல் வெற்றி

IPL5 CSK vs RR சென்னைக்கு ஒரு ராயல் வெற்றி


தோனி டாஸில் ஜெயித்தது நல்லதாக போயிற்று. அதனால் முதலில் பேட் செய்த ராஜஸ்தானை, 2-3 முறை மழை பெய்து கழுத்தறுத்ததில், விக்கெட்டுகளை இழந்து, 9 ஓவர்களில் 43-3 என்று பரிதாபமான நிலையில் இருந்தது. சென்னையின் பந்து தடுப்பிலும், பந்து வீச்சிலும் ஒரு purpose தெரிந்தது! ஹில்ஃபன்ஹாஸையும் யோ மகேஷையும் நிச்சயம் பாராட்ட வேண்டும். என்ன தான், மழை மற்றும் பிட்ச் காரணமாக பந்து வீச்சுக்கு ஆதரவு இருந்தாலும், அவர்கள் மிகவும் கட்டுப்பாட்டுடன் பந்து வீசினர்.

ஹில்ஃபன்ஹாஸ், field restriction இருந்த முதல் 6 ஓவர்களில், அதுவும் மும்பைக்கு எதிரான முந்தைய ஆட்டத்தின் கடைசி ஓவரில் ஏற்பட்ட பெருத்த ஏமாற்றத்தை தள்ளி வைத்து விட்டு, தொடர்ச்சியாக 4 ஓவர்கள் வீசி, 8 ரன்களே கொடுத்து, 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இதுவே, சென்னைக்கு நல்லதொரு தொடக்கத்துக்கு வழி வகுத்தது! மகேஷ் 4-0-21-2. பிரேவோ ரன்களை சற்றே வழிய விட்டதால் (3 ஓவர்கள், 38 ரன்கள்), ராஜஸ்தான் 126 ரன்கள் எடுத்தது, நான் 110 தான் தேறும் என்று எண்ணினேன்.

மிகவும் சுலபமாக சென்னை ஜெயித்து விடும் என்று எப்போதும் போல நம்பினேன் :) முதல் வாட்சன் ஓவரிலேயே முரளி விஜய் முட்டை-அவுட் ஆனார். டைட் தனது பந்து வீச்சில் 150 கிமீ வேகத்தை சர்வசகஜமாகத் தொட்டார்! 6-வது ஒவரில், 23 ரன்கள் எடுத்து, நன்றாக ஆடிக்கொண்டிருந்த ரைனாவும் காலி. 2-டவுன் பிரேவோ களமிறங்கினார். (ச)செம்மையாகத் தடவினார்! 12வது ஓவரில், அவரது நரக வேதனை முடிவுக்கு வந்தது! 60-3, RRR 8.4.

ஹஸ்ஸியை ரன் அவுட் ஆக்கியதோடு இல்லாமல், தானும் ரன் எடுக்க எந்த முயற்சியும் எடுக்கத் தயங்கிய தோனியின் தயவால், ராஜஸ்தான் பக்கம் ஆட்டம் மொத்தமாகத் திரும்பியது. ஜடேஜா பந்தை அடிக்க முயற்சியாவது செய்தார். திருவாளர் கேப்டன் தோனி, திரிவேதியின் 110 கிமீ பந்துகளை, க்ரீஸுக்குள் இருந்தபடியே, நடனமாடி கஷ்டப்பட்டு தடுத்து ஆடிக் கொண்டிருந்ததைப் பார்க்க பரிதாபமாக இருந்தது. யாராவது அவரை தடுத்தாட்கொண்டால் நல்லது என்று தோன்றியது ;) இப்படி சொதப்பி, 16வது ஓவரில் தோனி (10, 16 பந்துகளில்) வீழ்ந்தபோது, ஸ்கோர் 80-5, தேவையான ரன்ரேட் 11.8 !!!

உடனடியாக ஜடேஜாவும் அவுட்! இரு புது மட்டையாளர்கள் களத்தில், மார்க்கல், அனிருத்தா. இவர்களை Nothing to Lose என்ற நிலைக்கு (22 பந்துகளில் 43 ரன்கள்) தள்ளியதற்காவது தோனியை பாராட்டியே தீர வேண்டும்!!! அப்புறம் நடந்தது தான் எல்லாருக்கும் தெரியுமே :-) பங்கஜ், வாட்சன், டைட் என்று எல்லாருமே ஒரு வாங்கு வாங்கப்பட்டதில், 18.1 ஓவர்களிலேயே, சென்னைக்கு ஒரு நம்பமுடியாத வெற்றி! அதுவும், டைட்டின் பந்தில் அனிருத்தா அடித்த சிக்ஸர் கண்ணிலேயே நிற்கிறது! சென்னை தோற்கவே கூடாத ஆட்டத்தில் தோற்றும், ஜெயிக்கவே முடியாத ஆட்டத்தை ஜெயித்தும், இந்த IPL-இல் அடிக்கும் கூத்தை என்னவென்று சொல்ல :)

சில குறிப்புகள்: இந்த IPL-இல் சென்னை பேட்டிங் பல ஆட்டங்களில் சொதப்பலாக இருந்தது என்பதை தோனியே ஆட்ட முடிவு பேட்டியில் ஒப்புக்கொண்டார். இந்த லட்சணத்தில் ஆடினால், அடுத்த சுற்றுக்கு சென்னை தேறினாலும், கோப்பையை வெல்வது மிக மிக கடினம். பேட்டிங் ஆர்டரை அடிக்கடி மாற்றியதில், ஸ்திரத்தன்மை போய் விட்டது! தலைவர் தோனி ஃபார்மில் இல்லாததால், அவர் 2 அல்லது 3-டவுன் வருவதில் எந்த பயனும் இல்லை என்பது தெளிவு! அதனால், ரெய்னா, ஜடேஜா, பிரேவோவுக்குப் பின் அவர் வருவது சரியாக இருக்கும் என்று தோன்றுகிறது!

இனி வரும் 3 குரூப் ஆட்டங்களில், ஜடேஜா பேட்டிங் ஃபார்முக்கு / அவருக்கு பொறுப்பு வருவதற்கும் இது வழி வகுக்கும்! அதுவும் இலக்கைத் துரத்தும்போது, இது இன்னும் முக்கியமாகிறது! தோனி, தொடர்ந்து 10 to 15 ஓவர்களில் செய்யும் சொதப்பலால், RRR கண்டபடி எகிறி, அடுத்து வரும் பேட்ஸ்மன்களுக்கு அனாவசிய அழுத்தம் ஏற்படுகிறது! அது போல, சென்னை முதலில் பேட் செய்யும் ஆட்டங்களிலாவது, ஒரு 5-6 ஓவர்கள் இருக்கும் சூழலில், மார்க்கல் களமிறங்குவது மிக அவசியம்!

2-3 வருடங்களாக, தொடர்ந்து, ஐபிஎல் ஆட்டங்களில் சென்னை ரசிகர்களை இருக்கை நுனிக்கு இட்டு வந்து டென்ஷன் கொடுப்பதை ஒரு கலைவடிவமாகவே சென்னை அணி ஆக்கி விட்டது :) பலம் வாய்ந்த தில்லி அணியும், கெய்லையும், டிவிலியர்ஸையும் (மட்டுமே) நம்பியிருக்கும் டுபாக்கூர் பங்களூர் அணியும், பல ஆட்டங்களை ஓசியில் ஜெயித்த, உருப்படாத மும்பை அணியும் அதை விட உருப்படாத கொல்கத்தா அணியும் ஐபிஎல் கோப்பையை அண்டாத அளவுக்கு சென்னை அணி பார்த்துக் கொள்ளும் பட்சத்தில், டிவிட்டரில் உலவும் @elavasam @njganesh போன்ற சென்னை அணி ரசிகர்கள் இந்த டென்ஷனை மிக்க மகிழ்ச்சியோடு ஏற்றுக் கொள்வார்கள் :-) நான் சென்னை ரசிகன் கிடையாது!

காரணம்: எனக்கு ”சென்னை வெறியன்” சாரி, வெறியர் என்ற பட்டத்தை மிக்க அன்போடு டிவிட்டரில் வழங்கிய நண்பர் @njganesh -க்கு நன்றி :)
Sunday, May 06, 2012

திருவல்லிக்கேணி கருடசேவை - படங்கள்


திருமங்கையாழ்வார் மங்களாசாசனம்

விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் * வேழமும் பாகனும் வீழ*
செற்றவன் தன்னை புரமெரி செய்த* சிவனுறு துயர்களை தேவை*
பற்றலர் வீயக் கோல் கையில் கொண்டு* பார்த்தன் தன் தேர்முன் நின்றானை* சிற்றவை பணியால் முடி துறந்தானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே*

நான்கடிகள் கொண்ட பாசுரத்தில் திருமங்கையார் எத்தனை தகவல்கள் தருகிறார், பாருங்கள் !

விற்பெரு விழவும் கஞ்சனும் மல்லும் -

வில் விளையாட்டின் போது, தன்னை அழிக்க கம்சன் நடத்திய யாகத்தையும், கம்சனையும், மலையை ஒத்த பலம் வாய்ந்த அவனது மல்யுத்த வீரர்களையும்

  வேழமும் பாகனும் வீழ* செற்றவன் தன்னை - 

 கம்சனினின் அரண்மனையின் வாயிலில், கண்ணனை மிதித்தழிக்கக் காத்திருந்த குவலயாபீடம் என்ற பெருயானையையும் அதன் பாகனையும் வீழ்த்தி அழித்த கண்ணபிரானும்

புரமெரி செய்த* சிவனுறு துயர்களை தேவை* பற்றலர் - 

திரிபுர அசுரர்களை தனது புன்னகையால் வீழ்த்திய சிவபெருமான், ஒரு சமயம், கோபத்தில் பிரம்மனின் ஐந்தாவது தலையை கிள்ளி எடுக்க, அத்தலையின் ஓடு சிவனின் உள்ளங்கையில் ஒட்டிக் கொண்டதால், (திருமகளை அவ்வோட்டில் பிட்சை அளிக்க வைத்து) சிவன் அடைந்த துயரங்களிலிருந்து விமோசனம் அளித்த (திருக்கரம்பனூர்) உத்தமனும்

வீயக் கோல் கையில் கொண்டு* பார்த்தன் தன் தேர்முன் நின்றானை - 

மகாபாரத யுத்தத்தில் பாண்டவர் பக்கம் இருந்து, தன் திருக்கையில் சாட்டை ஏந்தி, அர்ஜுனனுக்கு தேரோட்டியாக களத்தில் முன் நின்று, தன் மார்பிலும் முகத்திலும் பகைவரின் அம்புகளை ஏற்று அர்ஜுனனைக் காத்த ஸ்ரீகிருஷ்ணனும்

சிற்றவை பணியால் முடி துறந்தானைத்* திருவல்லிக்கேணிக் கண்டேனே* - 

சிற்றன்னை கைகேயி இட்ட கட்டளைக்குப் பணிந்து, ராஜ்ஜியத்தையும், மணிமுடியையும் விருப்பத்துடன் துறந்த ஸ்ரீராமனும் ஆன ஒப்பில்லா எம்பெருமானை திருவல்லிக்கேணியில் நான் கண்டேனே ! *********************************

இன்று காலை திருவல்லிக்கேணி கங்கனா (கங்கை கொண்டான்) மண்டபத்தில் பெருமாள் எழுந்தருளி இருந்தபோது எடுத்தவை.
இது அல்லிக்கேணி சிறுவர்கள் குழாம் எழுந்தருளப் பண்ணியிருந்த சின்ன கருடசேவை

Saturday, May 05, 2012

IPL5 - RCB vs KXIP - இதல்லவோ டி-20 ஆட்டம்!

IPL5 - RCB vs KXIP - இதல்லவோ டி-20 ஆட்டம்! - எ.அ.பாலாநேற்று சின்னசாமி அரங்கில் சில நம்ப முடியாத விஷயங்கள் நடந்தன! டாஸில் வென்ற டேவிட் ஹஸ்ஸி அதற்கு முந்தைய நாள் பெய்த மழை காரணமாக முதலில் பந்து வீச முடிவு செய்தது, சரியான தேர்வு என்று தான் சொல்ல வேண்டும். பங்களூர் அணி தொடக்கத்திலேயே அடிதடிக்கு அஞ்சாத அகர்வாலை இழந்தது. இதுவரை நடந்த ஆட்டங்களில் ”நிறத்துக்கப்பால்” காணப்பட்ட பிரவீன் குமாரின் பந்து வீச்சை விவரிக்க/வர்ணிக்க வார்த்தைகளே இல்லை!!! 4-0-8-0.

கெய்ல், விராத் கோலிக்கு எதிராக இத்தகைய பந்து வீச்சை அதி அற்புதம் என்று தான் கூறுவேன்! அவர் பந்து வீச்சில், பந்து காற்றிலும், பிட்ச் ஆனபின்னும், ஒரு குடிகாரனைப் போல நிலை தடுமாறியதில், கெய்ல் என்ற புலி எலியானது, சற்றே ஃபார்மில் இல்லாத கோலி சுண்டெலியானது ;-) 9 ஓவர்களில் பங்களுர் எடுத்தது 48 ரன்கள் மட்டுமே.அடுத்து பந்து வீச வந்த சவ்லாவையும், அவானாவையும் எதிர்த்து, கெய்ல் கோர தாண்டவம் ஆடியபோதும், ஆசார் மெஹ்மூதின் பந்து வீச்சில் அவரது டி20 அனுபவம் மிளிர்ந்தது. 16வது ஓவரில் மெஹ்மூத் கெய்லை (71, 42 பந்துகளில்) வீழ்த்தினார். அடுத்த ஓவரில் கோலியும் காலி. 17 ஓவர்களில் ஸ்கோர் 135-3. மெஹ்மூத் தான் வீசிய 20வது ஓவரில், டிவிலியர்ஸ், மெக்டொனால்ட் விக்கெட்டுகளை சாய்த்து, நான்கே ரன்கள் கொடுத்து தனது அருமையான ஸ்பெல்லை (4-0-20-3) பூர்த்தி செய்தார்! பங்களூர் மொத்தம் 158 ரன்கள்.

பஞ்சாபின் துரத்தல் சுறுசுறுப்பாகத் தொடங்கியது. மந்தீப் சிங், சாகீர் கானை ஒரு கிளப் பந்து வீச்சாளரரைப் போல அணுகியதில், மார்ஷ் விக்கெட்டிழந்தும், ஸ்கோர் 8 ஓவர்களில் 70/1 என்று பஞ்சாப் ஆரோக்கியமான நிலையில் இருந்தது! அப்பண்ணா வீசிய 9வது ஓவரில் மந்தீப் அவுட். களமிறங்கிய கேப்டன் ஹஸ்ஸி, அப்பண்ணா வீசிய 13வது ஓவரிலும், பதான் வீசிய 16வது ஓவரிலும் செய்த துவம்சம் காரணமாக, பஞ்சாப் ஸ்கோர் 146-2. ஹஸ்ஸி 41 ரன்கள், 22 பந்துகளில் !!!

4 ஓவர்களில் 13 ரன்களே தேவை (8 விக்கெட்டுகள் கையில்) என்று தோற்கவே முடியாத நிலையில் இருந்தபோது, ’தோற்றே தீருவோம்’ என்று பஞ்சாப் பிரம்ம பிரயத்தனத்தில் இறங்கி, Harakiri செய்யவிருப்பதை அறியாத நான், சில மணித்துளிகள் வேறு சேனலுக்குத் தாவி மீண்டும் திரும்பி வந்து பார்த்தால், சைனியும், மஹ்மூத்தும் அவுட்டாகி, ஸ்கோர் 151-4. 14 பந்துகளில் 8 ரன்கள் என்பது ஹஸ்ஸி இருக்கையில் எளிது என்றபோதும், சின்னசாமியே ஏனோ டென்ஷனில் இருந்த மாதிரி தோன்றியது என் பிரமையா என்று தெரியவில்லை :-)

சாகீர் வீசிய அருமையான 19வது ஓவரில், 2 ரன் அவுட் (ஹஸ்ஸி, நய்யார்), 2 ரன்கள் மட்டுமே! அதாவது, 17,18,19-வது ஓவர்களில் பஞ்சாப் எடுத்தது 8 ரன்கள், இழந்தது 4 விக்கெட்டுகள், அதில் 3 ரன் அவுட் !!!! இந்த நம்ப முடியாத மகா கூத்துக்கு ஒரே காரணம், மர்ஃபியின் II Law of Thermodynamics --- Things get Worse under Pressure ;-) இறுதி ஓவரில் 5 ரன்கள் தேவை என்ற நிலையில், முதல் 2 dot பந்துகள், 3வதில் 2 ரன்கள், நாலாவதில் 1 ரன். இப்போது 2 of 2 தேவை. நிற்க!

பெங்களுர் ஜெயிப்பது, சென்னையின் அடுத்த சுற்று தகுதி வாய்ப்புக்கு நல்லதில்லை என்பது ஒரு புறம் இருந்தாலும், ப்ரீதி ஜிந்தாவின் முகத்தில் அப்பட்டமாகத் தெரிந்த டென்ஷனைப் பார்த்து மனம் கலங்கியே, பஞ்சாப் ஜெயிக்க வேண்டும் என்று வேண்டி விரும்பினேன் என்ற உண்மையை (இதை ஏதாவது ஒரு அனானி நண்பர் கண்டுபிடித்து கமெண்ட் போடுவதற்குள்) நானே சொல்லி விடுவது உத்தமம் ;-) அந்த 5வது பந்தை பியுஷ் சாவ்லா கூலாக சிக்ஸர் அடித்து, ப்ரீதியை டென்ஷனிலிருந்து விடுவித்தார்!

இது போன்ற “நகம் கடி” ஆட்டங்களை வைத்துப் பார்க்கும்போது டி-20 கிரிக்கெட்டுக்கு சூரியனைப் போன்ற பிரகாசமான எதிர்காலம் இருக்கிறது என்பது எள்ளளவும் சந்தேகமில்லை! பின்னர் ப்ரீதியை பேட்டி எடுத்தபோது, இறுதி ஓவரில் தனக்கு இதயமே நின்று விடுவது போல உணர்ந்ததாக சந்தோஷமாகவே கூறினார்! ஆக, பஞ்சாப் அடிக்கடி ஜெயித்து, ப்ரீதி ஜிந்தா போன்ற மெல்லிய இதயம் படைத்தவர்கள், ஆரோக்கியமாக, சந்தோஷமாக இருப்பது எல்லாருக்கும் மகிழ்ச்சி தானே! என்ன நான் சொல்றது :-)

Glossary:
நகம் கடி - NAIL BITING
நிறத்துக்கப்பால் - OFF COLOUR

IPL5 CSK vs KKR -சேப்பாக்கத்தில் சொதப்பிய சென்னை

IPL5 CSK vs KKR -சேப்பாக்கத்தில் சொதப்பிய சென்னை


கடந்த ஒரு 4-5 IPL ஆட்டங்களை ஏனோ பார்க்கவில்லை! இம்முறை Mr.Cricket மைக்கேல் ஹஸ்ஸி சென்னை அணியில் இருந்ததால், இந்த ஆட்டத்தில் வெற்றி கிட்டும் என்ற நம்பிக்கையில் டிவி முன் உட்கார்ந்தேன். (என் நல்ல காலம், டிக்கெட் இருந்தும், சேப்பாக்கத்துக்கு செல்லவில்லை!) ஆட்டத்தில் ஜெயிக்கிறாரோ இல்லையோ, டாஸில் தோனி ஜெயித்து விடுகிறார்! சென்னை முதல் பேட்டிங் செய்தது.

டுபிளஸ்ஸி 2வது ஓவரிலேயே லீ பந்து வீச்சில் காலி. 5வது ஓவரில் ஹஸ்ஸி தன்னைத் தானே ரன் அவுட் ஆக்கிக் கொண்டார்! ரைனா நன்றாக ஆடிக்கொண்டிருந்தது சற்று ஆறுதல். 10 ஓவர்களில் 74-2, ஆடுகளத்தின் தன்மையை (பந்து பிட்ச் ஆனவுடன், பந்தின் வேகம் கணிசமாக குறைந்து விடுவதை) வைத்து பார்க்கும்போது, இதை நல்ல நிலைமை என்று தான் கொள்ள வேண்டும்! 155-160 ரன்கள் எடுத்து விட்டால், கொல்கத்தாவுக்கு ஆப்பு உறுதி என்றும் தோன்றியது!


பிரேவோவும் ரைனாவும் சீக்கிரமே விக்கெட் இழந்தார்கள். தோனியும், மில்லியன் டாலர் பேபி ஜடேஜாவும் சோபிக்கவில்லை. நரைனின் அருமையான பந்து வீச்சை சமாளிக்க முடியாமல் பயங்கரமாகத் தடவினார்கள். 17 ஓவர்களில் 113/4. 140 கூட தேறாது என்று புரிந்தது. பிரேவோ, அஷ்வின் தவிர்த்து நம்மிடம் இருக்கும் பந்து வீச்சை வைத்துக் கொண்டு 140-ஐ defend பண்ணுவது கடினம் என்றும் புரிந்தது. சென்னையின் மரண வேதனையின் முடிவில் மொத்த ஸ்கோர் 139!

இம்மாதிரி ஆடுகளத்தில் திறமையும், நிதானமும் உள்ள மட்டையாளர்கள் மட்டுமே பரிமளிப்பார்கள் என்பதற்கு கம்பீரும், காலிஸும் சிறந்த உதாரணங்கள். மெக்கல்லம் 3வது ஓவரிலேயே அவுட்டான பின், இருவரும் ஜோடி சேர்ந்ததில், 12 ஓவர்களில் 82-1. காலிஸ் அவுட்டான பிறகும், கம்பீர் RRR 8-க்கு மேல் போகாமல் பார்த்துக் கொண்டார். திவாரியும், கம்பீரும், பதானும், 18, 19 மற்றும் 20வது ஓவர்களில் விக்கெட்டிழந்து, Climax-இல் சற்றே சுவாரசியம் கூடியபோதும், சென்னைக்கு Anit-climax ஆக ஆட்டம் முடிந்தது. சேப்பாக்கம் என்ற CSK-யின் கோட்டை மதிள்சுவரில் விரிசல்கள் தோன்ற ஆரம்பித்திருப்பதால், சென்னை ரசிகர்கள் ரொம்பவும் எதிர்பார்ப்பு இல்லாமல் இருப்பது அவர்கள் உடம்புக்கு நல்லது :-)

இத்தனை "பெத்த" பேரு மட்டையாளர்களை வைத்துக் கொண்டு (டுபிளஸ்ஸி, ஹஸ்ஸி, தோனி, ரைனா, ஜடேஜா, பிரேவோ, மார்க்கல், பத்ரி) 139 ரன்கள் எடுத்த ஒரு லாயக்கில்லாத அணி தோற்றது நியாயம் என்று தான் நினைக்கிறேன்! அதோடு, மார்க்கல் போன்ற பலம் வாய்ந்த hitter-களுக்கு ஒவ்வொரு ஆட்டத்திலும், கடைசியில் 8-10 பந்துகள் ஆடக் கிடைத்தால், அவர் தான் என்ன செய்ய முடியும்?
இந்த IPLலில் (மொத்தம் 8 ஆட்டங்களில், மும்பைக்கு எதிரான ஆட்டம் தவிர்த்து) அவருக்கு ஆடக் கிடைத்த வாய்ப்பு 7-8 ஓவர்கள் தான். இதில் என்னத்தை கிழிக்க முடியும்! அது போலவே, ரைனா கடந்த இரு IPL-கள் போல இந்த IPL-லில் பிரகாசிக்காதது சென்னையின் பின்னடைவுக்கு ஒரு முக்கியக் காரணம்.

தோனியும், பயிற்சியாளர் ஃபிளெமிங்கும், பிற பயிற்சியாளர்களும், திறமையான வீரர்கள் கொண்ட காம்பினேஷன் இருந்தும் சென்னையின் தொடர் தோல்விகளுக்கான காரணங்களை அலசி, புது திட்டங்களை வகுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். அது போலவே, என்னைப்போன்ற சென்னை ரசிகர்கள், கேல்குலேடரை கையில் வைத்துக் கொண்டும், Spreadsheet அனாலிஸிஸ் செய்தும், எத்தனை ரன் வித்தியாசத்தில், எவன் ஜெயித்து எவன் தோற்பதால், எந்த ஆட்டத்தில் மழை பெய்வதால், சென்னை அணி (எப்படியாவது) அடுத்த சுற்றுக்கு தகுதி பெறும் வாய்ப்புகள் குறித்து ஆராய்ச்சி செய்யத் தயாராக வேண்டும் ;-)

சென்னை சூப்பர் கிங்க்ஸ் (CSK) தங்கள் பெயரை "சென்னை சப்பைக் கம்மனாட்டிகள்" என்று மாற்றிக் கொள்ளலாம்! இந்த இடுகையில், யாரையும் திட்டக்கூடாது என்று தான் நினைத்திருந்தேன். ஆனால், "முடியல", மன்னிக்கவும்!

எ.அ.பாலா

Tuesday, May 01, 2012

திருமெய்யத்தில் பகவத் ராமானுஜரின் திருநட்சத்திர உத்சவம்


என் தாய் வழி பாட்டனார் புதுக்கோட்டை மற்றும் காரைக்குடிக்கு நடுவில் அமைந்திருக்கும் திருமெய்யம் என்ற ஊரைச் சேர்ந்தவர். அந்த வைணவ திவ்யதேசம் பற்றி எனக்கு நிறைய சொல்லியிருக்கிறார். அவர் காலமாகி கிட்டத்தட்ட 25 ஆண்டுகளுக்கு பின் தான், அக்கோயிலுக்கு சென்று பெருமாளை முதல் முறை தரிசித்தேன். அதன் பின்னர், ஒரு 3-4 முறை சென்றிருப்பேன்.

மலையைக் குடைந்து உருவாக்கப்பட்ட 8-ஆம் நூற்றாண்டு கோயிலிது. மலைக்கு மேல் கோட்டை உள்ளது. சில இடங்களில் சிதிலமடைந்த நிலையில் கோயிலை சுற்றி மதில் சுவரை காணலாம்.

அன்ன வுருவில் அரியை, திருமெய்யத்து இன்னமுத வெள்ளத்தை இந்தளூர் அந்தணனை, மன்னும் மதிட்கச்சி வேளுக்கை யாளரியை, மன்னிய பாடகத்தெம் மைந்தனை --- இது பெரிய திருமடல் பிரபந்தத்தில் கலியன் எனும் திருமங்கையாழ்வாரின் மங்களாசாசனம்!

திருமெய்யம் பற்றி சுஜாதா தேசிகன் அவர்களின் அருமையான இடுகை இங்கே!திருமெய்யராக கிடந்த கோலத்திலும் சத்யகிரி நாதராக நின்ற கோலத்திலும் பெருமாள் அருள் பாலிக்கும் திவ்ய தேசமான திருமெய்யத்தில், சுமார் 50 ஆண்டுகளாக (7 ஆண்டுகளுக்கு முன் நடைபெற்ற சம்ரோக்ஷணத்தின் போது கோயிலின் எல்லா உத்சவ மூர்த்திகளுக்குமான திருமஞ்சனத்தை தவிர்த்து) பகவத் இராமானுசரின் திரு அவதார திரு நட்சத்திர தினம் கூட அனுசரிக்கப்படாமலேயே இருந்து வந்தது சற்றே வேதனையான விஷயம்!

உடையவரின் உத்சவத் திருவுருவம் எழுந்தருளப் பண்ணப்படாமல் கருவூலத்திலேயே வைக்கப்பட்டிருந்தது. எனது உறவினர் ஒருவர் முயற்சியின் பேரில், எம்பெருமானாரின் உத்சவ மூர்த்தியை, இவ்வருடம், அவரது அவதார திருநட்சத்திர நாளில் (27 ஏப்ரல் 2012) உள் மண்டபத்தில் எழுந்தருளப் பண்ணவும் சிறிய அளவில் உத்சவம் நடத்தவும் உரிய அனுமதி பெறப்பட்டது.


அதன்படி, ஏப்ரல் 27 அன்று உபதேச (ஆட்காட்டி விரல் மடங்கி கட்டை விரலுடன் ஒரு வட்டம் ஏற்படுமாறு சேர்ந்து, மற்ற மூன்று விரல்களும் மேல் நோக்கியபடி இருக்கும்) முத்திரையுடன் கூடிய ராமானுசரின் அழகிய உத்சவ மூர்த்தி, ஆழ்வார் மண்டபத்தில், உடையவரின் மூலவ மூர்த்திக்கு நேர் எதிரே எழுந்தருளினார். எம்பெருமானாருக்கு திருமஞ்சனம், முறையான நாலாயிர பிரபந்த சேவையும், சாற்றுமுறையும் நடைபெற்றன. பட்டு வஸ்திரமும், மாலைகளும் சாத்திக்கொண்டு எம்பெருமானார் தேஜஸ்வியாக அருள் பாலித்தது கண்கொள்ளா காட்சி!


இரு ஆச்சரியமான விஷயங்களை இதை வாசிப்பவரிடம் பகிர்ந்து கொள்வது அவசியம் என்று நினைக்கிறேன். பெருமாள் கிடந்த கோலத்தில் அருளும் திவ்யதேசங்களில், திருமெய்யரின் மூலவ மூர்த்தியே, நீள அளவில், மற்ற திவ்யதேச மூலவர்களைக் காட்டிலும் பெரியவர்! மற்றொன்று, திருமெய்யத்தில் உபதேச முத்திரையுடன் கூடிய எம்பெருமானாரின் உத்சவ மூர்த்தி, விசேஷமானது, காண்பது அரிது! வைணவ சம்பிரதாயத்தில், உபதேச முத்திரையில் மேல் நோக்கி இருக்கும் மூன்று விரல்களும், சித்தம், அசித்தம் மற்றும் ஈஸ்வர தத்வங்களாகிய தத்வத்ரயத்தையும், திருமந்திரம், த்வயம் மற்றும் சரம ஸ்லோகங்களான ரகஸ்யத்ரயத்தையும் குறிப்பவை. ஆட்காட்டி மற்றும் கட்டை விரலும் சேர்வதால் ஏற்படும் வட்டம், பூர்ண சரணாகதியால் அடையவல்ல பரமபதத்தை குறிப்பதாகும். இப்படி உபதேச முத்திரையுடன் அருள் பாலிக்கும் எம்பெருமானார் திருவுருவம், திவ்யதேசங்களில், திருப்பதி மற்றும் ஸ்ரீரங்கத்தில் மட்டுமே காணப்படுகிறது.

பக்தர்களின் நித்ய தரிசனத்துக்காக, உடையவரின் உத்சவ விக்ரஹம், திருமெய்யரின் சன்னதியில் எழுந்தருளப் பண்ணப்பட்டு இருப்பதாலும், இதற்கு இந்து அறநிலையத்துறையின் அனுமதி கிடைக்கும் என்று நம்புவதாலும், திருமெய்யம் செல்லும் அன்பர்கள் இனி வருடம் முழுதும், பெருமாளோடு, எம்பெருமானாரையும் ஒரு சேர, அகம் மகிழ சேவிக்கலாம்! திருமெய்யத்தில் உடையவர் வழிபாடு மீண்டும் துவக்கப்பட்டதற்கு திருமெய்ய மக்களில் பலர் தங்கள் மகிழ்ச்சியை தெரிவித்துக் கொண்டனர்.

சாதி பேதமின்றி, ஸ்ரீமன் நாராயணனை சரணடைந்தவர்கள் அனைவரும் வைணவர்கள் என்றதோடு நில்லாமல், திருக்கோட்டியூர் கோயில் கோபுரத்தில் ஏறி நின்று, தனது ஆச்சாரியனான திருக்கோட்டியூர் நம்பியின் கட்டளைக்கு மாறாக, அஷ்டாட்சர மந்திரத்தை அனைவருக்கும் உபதேசித்தவர் அண்ணல் இராமனுசன்! வைணவ சம்பிரதாயத்தை நெறிப்படுத்தி, கோயில் ஒழுக்கை ஏற்படுத்தி, வைணவம் செழித்து தழைக்க இவ்வுலகில் அவதரித்த எம்பெருமானார், வைணவ குரு பரம்பரை என்ற ஆரத்தின் நடுநாயகமாய் திகழும் மாணிக்கம் போன்றவர் என்றால் அது மிகையில்லை. உடையவர் சம்பந்தம் இருந்தால் மட்டுமே, பூரண சரணாகதி நிலையிலும், பெருமாளை பற்ற முடியும் என்பது வைணவ பெருந்தகைகள் வாக்கு. அதனால், திவ்ய தேசங்களில், ராமானுச வழிபாடு என்பது கட்டாயம் கடைபிடிக்கப்பட வேண்டிய ஒன்றாகிறது.

அப்பேர்ப்பட்ட மகான் அவதரித்து ஆயிரம் ஆண்டுகள் 2017-ஆம் வருடம் சித்திரையில் திருவாதிரை நட்சத்திர நாளன்று பூர்த்தியாவது ராமானுச அடியார்களுக்கு ஒரு முக்கிய நிகழ்வாகும். அதை, அவ்வாண்டும் முழுதும் ஒரு பொது நிகழ்வாக, விமரிசையாக, சொற்பொழிவு, வழிபாடு, திராவிட வேதம் என்று போற்றப்படும் நாலாயிர பாராயணம், தரும காரியங்கள் என்று பல இடங்களிலும் கொண்டாட வேண்டும். அதற்குள், வைணவர்கள் அனைவரும், பிரபன்ன காயத்ரி என்று போற்றப்படும் இராமனுச நூற்றந்தாதியை மனனம் பண்ணி, அதை பிறழாமல் பாராயணம் பண்ண கற்றுக் கொள்ளுதல் வேண்டும். அது போலவே, எல்லா வைணவ திவ்ய தேசங்களிலும், அபிமான ஸ்தலங்களிலும், ஏன், எல்லா விஷ்ணு கோயில்களிலும், உடையவரின் உத்சவ மூர்த்தி பிரதிஷ்டை செய்யப்படு, நித்ய கைங்கர்யத்துடனான ராமானுச வழிபாடு பரவலாக நடைபெற வேண்டும் என்பது பலரின் அவாவாக உள்ளது!

மண்மிசை யோனிகள் தோறும் பிறந்து * எங்கள் மாதவனே
கண்ணுற நிற்கிலும் காணகில்லா * உலகோர்கள் எல்லாம்
அண்ணல் இராமானுசன் வந்து தோன்றிய அப்பொழுதே *
நண்ணரு ஞானம் தலைக்கொண்டு * நாரணற்காயினரே

(இராமானுச நூற்றந்தாதி 41)

இராமானுச முனியின் சீரும் சிறப்பையும் புரிந்து கொள்ள கூரத்தாழ்வானின் சீடரான திருவரங்கத்து அமுதனார் அருளிய இப்பாசுரமே போதும்! அதாவது, "பரமபத நாயகனே நேரில் வந்து காட்சி அளித்தாலும், அஞ்ஞான இருளில் அதை உணர இயலாத நிலையில் இருந்த உலக மாந்தரெல்லாம், ராமானுஜர் அவதரித்த அக்கணமே, நல்ஞானம் பெற்று, நாராயணனுக்கு உற்றவர் ஆயினர்" என்பது இப்பாசுரத்தின் உரையாம்!

உயர்ந்து மலர்ந்த திருமுடி அழகும், உறைந்து தழைந்த திருக்கேசமும், நயந்து சுற்றிய நல்ல குழலிணை நன்றாய்ச் சுற்றிய சிகாபந்தமும், பின்னெடுத்ததோர் பிடரியின் அழகும், பிரிந்து கூடிய முக்கோல் அழகும், கண்ணொடு பிரியும் அரவப்படமாய் கண்களை மயக்கும் அழகிய முதுகும், காணக்காணத் திகட்டிடாது கவினாய்த் தோன்றும் இராமாநுஜனே!

தேனாம் உன்னடிச் சரணம் அடைந்தோம் தினமும் எம்மைக் காத்தருள் என்றே.. காத்தருள் என்றே!

எ.அ.பாலா

நன்றி நண்பரே !

வருகை தந்தமைக்கு நன்றி! உங்கள் மேலான கருத்துக்களை எதிர்பார்க்கிறேன்!
Related Posts with Thumbnails